நமது கதவைத் தட்டியிருக்கும் “ஹோம் மேட் செக்ஸ் வீடியோ” பயங்கரம்


-உவைஸ் முஹைதீன்-

(வயது வந்தவர்களுக்கு உகந்தது)

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து, விபரீதங்களை அஞ்சி பிற்போட்டுக்கொண்டே வந்த விடயம். இன்று எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

தயவுசெய்து இதிலுள்ள நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறையப் பேரை விழிப்பூட்ட வேண்டியிருக்கிறது. ஆபாசமாக இருப்பதாக கருதுவோர் மன்னிக்கவும்.

சில நாட்களாக வட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் சுற்றும் ஒரு அபலைப் பெண்ணின் அழுகையுடன் சேர்ந்த ஒலிப்பதிவு பல தளங்களிலும் அதிர்வுகளையும் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்திருப்பதாகத் தெரிகின்றது.

இப்போது கூட இதை எழுதுவதா இல்லையா என்ற சஞ்சலத்தோடு அலுவலகத்திலிருந்து வந்து பார்த்தால், சகோதரர் சப்வான் பஷீர் இது குறித்த பதிவொன்றை சிறப்பாக எழுதியிருந்தார். அது எனக்கு உந்துதலாகவும் அமைந்ததென்றால் மிகையாகாது.

பல்வேறு வழிகளில் இணையத்தை வந்தடையும் இளம் பெண்களினதும், காதல் ஜோடிகளினதும், தம்பதிகளினதும் நிர்வாண ஒளிப்படங்களும், அவர்கள் உடலுறவிலும் அது சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபடும் காணொளிகளும் கட்டற்றுப் பரவும் அபாயம் தென்னாசியாவை எட்டி சில வருடங்களாகின்றன.

இதற்கு இந்தியா, பாகிஸ்த்தான் மற்றும் வங்காளதேச முஸ்லிம் சகோதர சகோதரிகள் பலியாகி பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்திய கொடூரம் ஒன்று இலங்கை முஸ்லிம் சகோதரிக்கு நேர்ந்திருக்கிறது.

இவ்வாறான வீடியோக்களில் பல வகைகள் இருக்கின்றன. Hidden camera videos எனப்படும் வீடியோவில் உள்ளோருக்கு தெரியாமல் கமெராவை ஒளித்துவைத்து பெறப்படும் காணொளிகள் இதில் அடங்கும்.

இவை தவிர விருப்பத்துடன் தனியே ஒருவரால் எடுக்கப்பட்ட தனது காதலன் / காதலிக்கு காண்பிக்கப்படும் / பரிமாறப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள்.

இலங்கை சம்பவத்தில் மணம் முடித்து பதினைந்து நாட்களின் பின்னர் குறித்த மனைவியை நாம மட்டும் பாக்கத்தான் என்று சம்மதிக்கச் செய்து, எடுக்கப்பட்ட இரு காணொளிகள் இணையத்துக்கு கசிந்திருக்கின்றன அல்லது கசியவிடப்பட்டிருக்கின்றன. குறித்த ஒலிப்பதிவில் பேசுவது அந்தப் பெண்தானா என்பது உறுதிசெய்யப்படவில்லை. எனினும் அந்தப் பேச்சு நெஞ்சை உருக்குகின்றது. கொடுமை என்னவென்றால், அறியாமையாலும் கட்டாயத்தாலும் செய்யக்கூடாததை அனுமதித்து மனது நொறுங்கிப் போயிருக்கும் அந்த சகோதரியின் புகைப்படங்கள் கசியவிடப்பட்டு, சமூக வலைத்தளப் போராளிகளின் கைகளில் சிக்கி பரப்பப்படுகின்றன.

இது தொடர்பில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் வதந்திகளை அறியக்கிடைத்தது. எனினும் அதை துருவித் துருவி ஆராய்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல.

அதிகளவு இணையத்தளங்களில் இருந்து குறித்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன என்பது ஆறுதலளித்தாலும், இணையத்தில் வெளியான எதையும் பூரணமாக அழிப்பதென்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகும். இணையத்தின் இருண்ட வெளிகளிலும் உலகின் பல்லாயிரம் கணினிகளில் சேமிக்கப்பட்டும் அவை வாழ்கின்றன, பகிரப்படுகின்றன, மீண்டும் பரவுகின்றன.

இன்னொரு ஆபத்தை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கிறது. Skype போன்ற Video chat முறையில் பேசும்போது, விளையாட்டாகவோ வேண்டுமென்றோ மறுமுனையில் குறித்த ஸ்க்ரீன் வீடியோவாக ஒளிப்பதிவு செய்யப்படுகின்றது. இது அதிகம் பேருக்கு தெரியாது.

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பேசப்பட்ட பெண் வீட்டில் தனியறையில் இருந்துகொண்டு அவருடன் வீடியோ கோள் பேசுவதை யாரும் இப்போது தவறாகப் பார்ப்பதில்லை. திருமணம் முடியாத ஆணும் பெண்ணும் அந்நியர்களே. திருமணம் செய்ய ஆகுமாக்கப்பட்ட ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது மூன்றாவதாக ஷெய்த்தான் இருக்கிறான் என்று மார்க்கம் சொல்கிறது. அது ஒன்லைனில் தனித்திருந்தாலும் பொருந்தும். இதன்போது விளையாட்டாக மாப்பிள்ளை குறித்த பெண்ணின் வீடியோவை பதிவுசெய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திருமணம் பேசிவிட்டார்கள் தானே என்று பெண்ணும் சற்று தாராளமாக இருக்கக்கூடும். ஒருவேளை மாப்பிள்ளையின் கணினியை அவசரத்துக்கு பாவிக்கும் நண்பரினதோ, அல்லது அதைப் பழுதுபார்க்கும் நபரிடமோ குறித்த வீடியோ போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது. இப்படி எங்கேயோ சுற்றி அது இணையத்துக்கு வந்தால். அவளவுதான். பிறகு ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கு என்ன வழி என்று நீங்கள் கேட்பது புரிகிறது….

இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அவ்வாறான அந்தரங்கமான போட்டோவோ வீடியோவோ எடுக்கவோ எடுக்க அனுமதிக்கவோ கூடாது.

உண்மையாக உங்கள் காதலியையோ மனைவியையோ நீங்கள் நேசித்தால் விளையாட்டாக கூட இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது.

பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்களும் கணவரும் தனியாக இருக்கும் உங்களது சொந்தப் படுக்கையறையேயாயினும், கமெரா வசதியுள்ள தொலைபேசி அல்லது வேறேதும் கருவி வழமைக்கு மாறாக கட்டிலை படம்பிடிக்கக்கூடிய திசையில் இருக்கிறதா என்று அவதானிக்க வேண்டும்.

வீடியோ கோள்களில் ஈடுபடாமல் இருப்பது அல்லது குறைந்தபட்சம் எல்லைமீறாமலிருப்பது பாதுகாப்பானது.

நடக்கக்கூடாத்து நடந்த பின்னர் வருந்தி அழுவதைவிட. வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

அல்லாஹ் எம் அனைவரையும் தொழிநுட்பத்தின் பயங்கரமான தீய விளைவுகளிலிருந்த பாதுகாப்பானாக.

இனுதியாக சமூக வலைத்தளப் போராளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

இந்த விடயம் நடக்க வேண்டும் என்பது இறைவனின் தீர்மானத்தில் உள்ளது. அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும், ஒருகணம் உங்கள் நெஞ்சில் கைவைத்து உங்கள் சகோதரிக்கோ மனைவிக்கோ மகளுக்கோ இப்படி ஒரு நிலை ஏற்பட்டு அதை ஊர் பேர் தெரியத சம்பவத்தையே அறியாத போராளிகள் எல்லாம் வெளியாகி (தற்போது நீங்கள் செய்துகொண்டிருப்பதுபோல்) பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒளிப்படத்தை பரப்பி விமர்சித்தால் எப்படியிருக்கும் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

(கட்டுரை ஆசிரியரை நீங்கள் தொடர்புகொள்ள விரும்பினால் uwaismohideen@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் )

Advertisements