கர்ப்பிணிகளுக்கு வழங்கிய போசனைப் பொருட்களில் புழு


சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை பொருட்கள் வழங்கும் நிகழ்வு ​நேற்று (21) நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இடம்பெற்றது.

கௌப்பீ 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பயறு 1 கிலோ, கடலை 1 கிலோ, சோயா 500 கிராம், நெத்திலி 500 கிராம், செமன் டின் 2, சிவப்பு அரிசி 2 கிலோ ஆகியன அடங்கிய பொதியையே இவ்வாறு வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த பொதியில் இருந்த கொளப்பீ, கடலை, நெத்திலி ஆகியவற்றில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் பி.எல்.கே வசந்த தெரிவிக்கின்றார். இது குறித்து பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கர்ப்பிணி தாய்மார்கள் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொதிகள் வழங்கிய இடத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் அதனை சோதனை செய்து, 130 பொதிகளில் புழுக்கள் இருந்ததை உறுத்திப்படுத்தியுள்ளனர்.

அதன்பின் குறித்த பொதிகளில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த பொருட்களை மட்டும் கைப்பற்றிக்கொண்டு, ஏனைய பொருட்களை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கியுள்ளனர்.

மேலும் விசாரணையின் பின், குறித்த பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை நாளை (23) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த அத்தியவசிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு தனியார் தொகை கடையை இன்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்தனர்.

இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நுகர்வுக்கு தகுதியற்ற மேலும் சில அத்தியவசிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த கடை உரிமையாளருக்கும், இவ்வாறான பொருட்களை பெற்றுக்கொண்ட கினிகத்தேனை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்திற்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் பி.எல்.கே வசந்த கூறியுள்ளார்.(ADT) (பட உதவி – அததெரன)

Advertisements