காத்தான்குடியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
இலங்கை நாட்டில் நல்லாட்சிக்கான அத்திவாரம் இடப்பட்டு வரலாறு காணாத வகையில் மிக அமைதியான ஒரு பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு முடிவடைந்த நிலையில் தொடர்ந்தும் அரசியலை அடிப்படையாகக்கொண்ட ஒரு வன்முறைச் சம்பவம் கடந்த

வெள்ளிக்கிழமை 21.08.2015ம் திகதி மாலை காத்தான்குடியில் இடம்பெற்றதை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்வன்முறைச்சம்பவத்தில் அநியாயமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்களுக்கு ஜம்இய்யா தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தேசிய ரீதியில் எவ்வித பாரிய வன்முறைச்சம்பவங்களும் இடம்பெறாத நிலையில் முழுக்க, முழுக்க முஸ்லீம்கள் வாழும் காத்தான்குடியில் இத்தகையதொரு நிகழ்வு பதிவாகியதை எந்தவொரு முஸ்லிமும் அங்கீகரிக்க முடியாது.
எனவே, எமக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பகையுணர்வுகளை மறந்து நாம் அனைவரும் முஸ்லீம்கள் என்ற உணர்வோடும் சகோதரத்துவத்தோடும் ஒற்றுமையோடும் செயற்பட வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்துகின்றது.
“நிச்சயமாக, முஃமீன்கள் அனைவரும் சகோதரர்களே! மேலும் உங்களது சகோதர்களுக்கு மத்தியில் நீங்கள் (முரண்பாடு ஏற்படும்போது) இணக்கத்தை ஏற்படுத்துங்கள், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், அருள் செய்யப்படுவீர்கள்” (சூறதுல் ஹ_ஜ்ராத்: 10) என்ற அல்குர்ஆன் வசனத்திற்கமைய சமூகத்தின் பொதுத்தரப்பினரும் பொறுப்பு வாய்ந்தவர்களும் இந்த அசாதாரண பகையினை மிகநீதமாக அணுகி தீர்க்க வேண்டும்; என்பதை ஜம்இய்யா  வலியுறுத்துகின்றது.
எனவே, பொது மக்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து இஸ்லாமிய ஷரீஆவின் வரையறைகளை மீறாது நடந்து கொள்ளுமாறும், வீதிகளில் ஆங்காங்கே கூடி நின்று கதைப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் மேலும் இது போன்ற அசாதாரண சூழ்நிலைக்கு வித்திடும் விடயங்களில் இருந்து முழுமையாக தவிர்ந்து கொள்ளுமாறும், ஒரு முஸ்லிமுடைய உயிர், மானம், பொருளாதாரம் ஆகியவை பிற முஸ்லிமுக்கு ஹராம் என்பதுடன், அதில் அத்துமீறுவது மிகப்பெரும் பாவமாகும் என்பதையும்  ஜம்இய்யா அல்லாஹ்வின் பெயரால் நஸீஹத்தாக கூறிக்கொள்கின்றுது.
அத்தோடு எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக என காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம்.ஜெலீல் (மதனி) ஆகியோர் கையொப்பமிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
KKY JU_Copy1
Advertisements

One comment

  • இப்படிப் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அறிக்கை விட்டால் எப்படி?
    யார் கலவரத்தைத் தூண்டினார்கள்? யார் நேரடியாகச் சம்பந்தப்பட்டார்கள் என்பதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா?
    பக்கச்சார்பற்ற உங்கள் அறிக்கையைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
    Dr M.L.Najimudeen Malaysia

    Like