சிறார் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்ப ஒன்றிணைவோம்! தேசிய சூறா சபை ஜனாதிபதிக்கு கடிதம்..


– ஜுனைட்.எம்.பஹ்த் –  

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,

அண்மையில் திவுலபிடிய, கொடதெனியாவ கிராமத்தில் சேயா சதெவ்மி என்ற சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கோரமான விதத்தில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக தேசிய சூரா சபை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

தேசிய சூரா சபையானது, இலங்கையில் உள்ள 18 முஸ்லிம் சிவில் அமைப்புக்களைக் கொண்டதொரு ஸ்தாபனமாகும். சிறார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி அநியாயங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக குரலெழுப்ப வேண்டிய தருணம் வந்துள்ளது என தேசிய சூரா சபை நம்புகின்றது.

பெண்கள், சிறார்கள் உட்பட அனைவருக்குமான பாதுகாப்பான ஒரு தேசமாக நமது தாய்த் திருநாட்டை மாற்றும் பொருட்டு, இதுபோன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்குவதற்காக தாங்களும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் தலையீடு செய்வது தற்போது அவசியமாகி உள்ளது என நாம் கருதுகின்றோம். இளந்தழிர் சதெவ்மிக்கு இழைத்த குரூரமான இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்களை தாமதமின்றி கண்டுபிடித்து, அவர்களுக்கு பெற்றுத் தரக் கூடிய அதிகூடிய தண்டனையைத் தருவது இம்முன்னெடுப்பிற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்றும் நாம் எண்ணுகின்றோம்.

அண்மைக் காலமாக சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் கற்பழிப்புகள் உட்பட்ட பல்வெறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இதுபோன்ற மிருகத்தனமான செயல்களுக்கு தரப்படும் தண்டனைகளின் இலேசான தன்மை இந்நிலைக்கு ஒரு முக்கிய காணமாகும் என்பது தெளிவு. புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இதுபோன்ற விடயங்களில் ஆறுதல் தரும் வகையான மாற்றம் ஏற்படும் என இவ்வரசாங்கத்தை அமைப்பதற்கு பங்களிப்பு செய்த பெரும்பான்மையான மக்கள் புது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதற்காக, அரசின் மட்டுமின்றி சிவில் அமைப்புகளினதும், ஊடகங்களினதும் உதவி மற்றும் அர்ப்பணிப்பு இன்றியமையாததாகும்.

மனிதத்தின் பெறுமானங்களையும் நல்லொழுக்கத்தின் ஆணிவேரையும் வேரோடு பிடுங்கும் இதுபோன்ற மிருகத்தனமான செயல்களுக்கு அதிகூடிய தண்டனைகளைத் தருவதன் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும் என விற்பன்னர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இக்கவலைக்கிடமான நிலைமையை கட்டுப்படுத்த இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இது மேலும் மோசமாகலாம். ஆபாசக் காட்சிகள், தவறான ஆசைகளைக் கிளறிவிடும் படங்கள், இச்சையை தூண்டும் விதத்தில் காட்சிகளை வெளியிடும் அச்சு மற்றும் இலத்தரனியல் ஊடகங்கள் இந்த நிலைக்கான ஏனைய காரணிகளாகும். இதன் காரணமாக, இளம் வயதினர் மட்டுமின்றி பெரியவர்களின் உள்ளங்களும் சீர்கெட்டு கொலை, கற்பழிப்பு, சிறார் துஷ்பிரயோகம் போன்ற அநியாயங்களுக்கு காரணமாகின்றனர். மனதை விகாரமாக்கும் இதுபோன்ற குற்றச் செயல்களை தூண்டும் வழிகளை அடைப்பதன் மூலம் இணையத்தளம் போன்ற தொழில்நுட்பங்களுக்கு தேவையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும் என நமது தேசிய சூரா சபை திடமாக நம்புகின்றது. இதற்காக அனைத்துத் தரப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்.

அதேவேளை, தண்டனைகளை கடுமையாக்குவது மாத்திரம் போதுமானதாகாது. இச்சைகளை தூண்டி உள்ளத்தை நாசமாக்கும் அடிப்படை சமூகக் காரணிகளையும் இனங்கண்டு அதற்கான தீர்வுகளையும் கண்டறிவது அவசியமாகும்.

இந்நாட்டின் பொறுப்புணர்ச்சி உள்ள பிரஜைகள் என்ற வகையில் சமூக ஒழுக்கத்தின் கட்டமைப்பு சின்னபின்னமாகி விடாமல் பாதுகாப்பது நம் அனைவரினதும் கட்டாயக் கடமை ஆகும்.

மேலும், நல்லாட்சியை விரும்பும் தங்களையும், கௌரவ பிரதமர் அவர்களையும் போன்ற அதேநேரத்தில், நம் தாய்த் திருநாட்டை விட்டும் ஊழல், மோசடி, கொலை, கற்பழிப்பு போன்ற தீங்குகளை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என திடசங்கற்பம் பூண்டுள்ள சிறப்பான தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றபடியால் இப்பாரிய கைங்கரியத்தை சிறப்பாக செய்து முடிக்க இயலும் என்ற அசையாத நம்பிக்கையும் நமக்குண்டு.

பிரதி : கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ

Advertisements