மஹிந்தவுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்ட வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை


இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அரச நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும் தொலைத்தொடர்பு மானிய ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷா பல்பிட ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக சுமார் 60 கோடி ரூபாய் அரச நிதியை செலவிட்டதாக குற்றம்சாட்டி சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குமாறு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளுக்கு அரச தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மனித உரிமை ஆர்வலர் குற்றச்சாட்டு

இதற்கிடையில், லலித் வீரதுங்கவிற்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்யும்போது சட்ட மா அதிபர் விஷேச சலுகையோன்றை பெற்றுக் கொடுத்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் நபர்கள் முதலில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே வழக்கு தாக்கல்செய்யப்படுவது வழக்கம் என்றும் ஆனால், இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்கைத் தாக்கல் செய்ததன் மூலம் லலித் வீரதுங்கவைக் கைதுசெய்வதை சட்ட மா அதிபர் தவிர்த்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

இதே வேளை, நேற்று தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகொனை வரும் 20 தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(BBC)

Advertisements