கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி மட்டக்களப்புக்கு ஜனாதிபதி விஜயம் செய்வதே நல்லாட்சிக்கு அழகு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து இம் மாவட்டத்தின் அபிவிருத்து பற்றி கதைக்கவுள்ளார். அதற்கு முன்னர் நாட்டிலுள்ள சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்து இந்நாட்டில் நல்லாட்சி உள்ளதென்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு வருகை தருவதற்கு முன்னர் சிறைக்கூடங்களில் உண்ணா விரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வது நல்லாட்சிக்கு நன்மையாக அமையும்.

சிறைக்கூடங்களில் வாழும் எமது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்கஷ தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பொறுப்பு சட்டம் ஒழுங்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு உள்ளதாக கூறுகின்றார்.

மறுபுறம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் திலக் மாரப்பன கூறுகின்றார்.

முற்றிலும் இனவாதப் போக்குடன் சங்கு தப்பினால் கணபதி என்ற நிலையில் ஆணையாளர் கணபதி என்ற நிலையில் ஆளையாள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பது இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிப்புச் செய்யும் செயலாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக 2009 மே 19ம் திகதிக்கு பிற்பட்ட காலத்தில் இருந்து எமது தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 18 சுற்று பேச்சு வார்த்தைகளை 2011 ஜனவரி தொடக்கம் 2011 டிசம்பர் வரையும் நடாத்தியது. இதன் போது எந்தவிதமான தீர்வும் கிட்டவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்னைய ஆட்சியாளர்களிடம் எமது தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் தலமையில் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை ஒரு பொருட்டாகக் கொள்ளாது இனவாத போக்கினையே கடைப்பிடித்து வந்தனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரிபால சிறிசேனவிடம் எமது தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுத்த முதலாவது கோரிக்கை, நாட்டிலுள்ள சிறைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான். இதனை யிட்டு எந்த கரிசனையும் செலுத்தப்படவில்லை.

இதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகி ஒன்பது மாதங்களாகின்றன. பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தேறி இரண்டு மாதங்களாகின்றன. ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுதலை செய்யாமலும் நல்லாட்சி என்ற பதம் பாவிக்கப்படுகின்றது.

உண்மையில் இலங்கையில் நல்லாட்சி நடைபெறுமாயின் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பிரயோகம் செய்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விட்டு மட்டக்களப்புக்கு வருகை தருவது நல்லாட்சிக்கு அழகாகும்.

இதேவேளை ஜனாதிபதியை மட்டக்களப்புக்கு வரவழைத்து வருவதிர் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை விடுபவர்கள இவ்விடயத்ததை ஜனாதிபதிக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார். (VK)