டிசம்பர் மாதத்திற்குள் தேயிலைக்கான ஸ்திரமான விலை நிர்ணயம்


தேயிலையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மீளவும் ஸ்திரமான நிலைக்கு வரும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது

ஈரானுக்கெதிரான தடைகள் மற்றும் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்குமிடையிலான நெருக்கடி நிலை நாட்டின் தேயிலைக்கான கேள்வியை பாதித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடிகள் எதிர்வரும் காலங்களில் தீர்க்கப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுவரை தேயிலை உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கூறினார்.

தற்போது தேயிலை கொழுந்து கிலோ கிராமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள 80 ரூபா நிர்ணய விலையை இம்மாதம் இறுதி வரை நீடிப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு, பிரதமரின் தலைமையிலான வர்த்தக முகாமைத்துவ குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் புதன் கிழமை கூடவுள்ள பிரதமர் தலைமையிலான குழு இது தொடர்பில் தமக்கு சாதகமான பதிலை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisements