பறந்த விமானத்தின் டயர் வெடிப்பு : தரையிறங்கிய போது பதற்றம் : கராச்சியில் சம்பவம்


பாகிஸ்தானில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று காலை கராச்சி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் தனியார் நிறுவனமான ஷஹின் எயார் லைன்சுக்கு சொந்தமான விமானம் நேற்று காலை கராச்சி விமான நிலையத்தில் இருந்து லாகூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

ஓடுபாதையில் ஓடி, உயரக்கிளம்பிய அந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் கராச்சி நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார். இதனையடுத்து அனுமதி கிடைத்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறங்கியது.

ஓடுபாதையில் இறங்கியபோது வெடித்திருந்த ஒரு டயர் ஓடுபாதையை விட்டு விலகியதால், சறுக்கியபடி சென்ற விமானம் ஒருவழியாக வேகம் குறைந்து,   ஒதுங்கி நின்றது. இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக நூற்றுக்கும் அதிகமான பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் அந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, கராச்சி நகரில் இருந்து லண்டன், பாரிஸ், மிலன், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓடுபாதையின் குறுக்கே ஒதுங்கி இருக்கும் விமானத்தை அங்கிருந்து நகர்த்தி, ஓரம்கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்த பின்னர், வழக்கம்போல் இதர விமானச் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என கராச்சி நகர உள்நாட்டு விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.