மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன


மத்திய மழை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

லக்ஷபான பிரதேசத்தில் நேற்று முதல் பெய்த கடும் மழை காரணமாக லக்ஷபான நீர்தேக்கத்தில் ஒரு வான் கதவு ஒன்பது அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் போது மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்க வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் ஆற்றுக்கு அண்மையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. மாலை வேளையில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படுவதனால் கடும் குளிர் நிலவி வருகிறது.

இதேவேளை பெய்த மழை காரணமாக ஹட்டன் – டிக்கோயாவில் பாத்போட் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. டிக்கோயா பகுதியில் தொடரும் மழை காரணமாக டிக்கோயா பாத்போட் தோட்டத்தில் இரவு மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் 5 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கபட்ட 5 குடும்பங்களை சேர்ந்தவர்களும் பாத்போட் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.