சீனப் பொருட்களில் 10 இல் 4 போலியாம் : சீனாவே சொல்கிறது!


சீனாவில் இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில் 10 இல் 4 தரமற்றவை மற்றும் போலியானவை என தகவல் வெளியாகியுள்ளது.

நுகர்வோர் நலன் மற்றும் உரிமை பாதுகாப்பு மீதான, சீன அரசின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு, இணையவழி வர்த்தகத்தில், அமெரிக்காவை சீனா, பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்காவில் 20 இலட்சம் கோடி ரூபாய்க்கு இணையவழி வர்த்தகம் நடந்துள்ளது. சீனாவில் 28 இலட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆனால், இணையவழி வர்த்தகம் மூலம் சீனாவில் எண்ணற்ற போலி பொருட்கள் விற்பனை ஆவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் அரசின் வர்த்தகத்துறைக்கு இது சம்பந்தமாக 78,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 356 சதவீதம் அதிகம். இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் 10 பொருட்களில் நான்கு தரமற்றதாகவோ, போலியாகத் தயாரிக்கப்பட்டதாகவோ உள்ளது. இதைத் தடுக்க இணையவழி வர்த்தகம் மூலம் மக்களுக்கு விற்கப்படும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும்; போலி தயாரிப்பாளர்களை ஒடுக்க, கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலி என்பதை சீன அரசே ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பது மிக அபூர்வமான விஷயம் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisements