போர்க்குற்ற விசாரணையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையும் சேர்க்கப்படவேண்டும்’


இலங்கையில் ஐ.நா . அனுசரணையுடன் நடைபெறவுள்ள யுத்த குற்ற விசாரணை 1985 ம் ஆண்டு தொடக்கம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட முஸ்லிம்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவன ஈர்ப்பு போராட்ட நிகழ்வின் போது இந்த பிரகடனம் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

”முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனம் ” என வெளியிடப்பட்ட அந்த பிரகடனத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்ச்சிகளில் முஸ்லிம்களுக்கு சம அந்தஸ்து வழங்குதல், வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விவகாரம் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகளும் விசாரணையில் சேர்க்கப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும், அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும், வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும், வனப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற விடயங்களும் ஏற்பாட்டாளர்களினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. (BBC)

Advertisements