அதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது


அதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகதரித்துள்ளது.

நீர்பாசன திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் 75 வீதம் வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 9 நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது

கொத்மலைஇங்கினிமிடிய,கலாவெவ,வெகரகல,அங்கமுவ,தப்போவ,தெததுரு ஓயா ,இராஜாங்கனை மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளே திறக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

குறித்த நீர்த்தேக்கங்களுக்கு கீழ் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு அனர்த்த பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இன்று (08) நண்பகல் வேளையில் யாழ்ப்பாணத்திற்கு 350 கிலோமீற்றர் தூரத்தில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூஷியுள்ளது.