திருமலையில் சிறுவனொருவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்


திருகோணமலை தோப்பூர் பகுதியில் சிறுவனொருவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

திருகோணமலை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தோப்பூர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமூகமான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

4 பேரை ஏற்றிய மோட்டார் சைக்கிளொன்று தோப்பூர் பகுதியில் நேற்று (07) மாலை பயணித்த போது அதனை பொலிஸார் வழி மறித்ததையடுத்து அதிலிருந்த மூவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒருவர் பொலிஸாரின் தாக்கதலுக்கு இலக்காகியுள்ளார்.

தோப்பூர் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான 14 வயதான குறித்த சிறுவன் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் பணயித்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.