மாலைதீவு ஜனாதிபதியை கொல்ல முற்பட்டதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு


மாலைதீவு ஜனாதிபதி அப்துலா யாமீனை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டத்துடன் தொடர்புடையவர் என, இலங்கையர் ஒருவர் மீது மாலைதீவு பொலிஸார் குற்றம்சுமத்தியுள்ளனர். மாலைதீவு ஜனாதிபதி அப்துலா யாமீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பயணித்த படகில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட சில வாரங்களின் பின்னர் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அப்துலா ஜாமீன் பயணம் செய்த படகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும் இதனால் மாலைதீவின் முதல் பெண்மணியான அவரது மனைவி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் சினைப்பர் தாக்குதல் மூலம் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது. சினைப்பர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி மற்றும் குண்டு ஆகியவையும் மீட்கப்பட்டன.

இது தொடர்பிலான விசாரணைகளில் இந்த திட்டத்துடன் தொடர்புபட்டதாக கூறப்பட்டு 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 24ம் திகதி கைது செய்யப்பட்டார்.

தாங்கள் சினைப்பர் வீரரின் பின்னணியை ஆராய்வதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் உமர் நசீர் தெரிவித்துள்ளார்.