113 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை பரிந்துரை


இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளதாக இராமேசுவரம் மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இராமேசுவரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்பிடிக்க சென்ற 126 மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கைது செய்தனர்.

அவர்களை எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார், ஊர்க்காவல்துறை, பருத்தித்துறை ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றங்கள் உத்தரவிட்டதன் பேரில், மீனவர்கள் 126 பேரும் அனுராதபுரம், வவுனியா, யாழ்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் இந்திய மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தீபாவளி பண்டிகை நாள் வருவதை முன்னிட்டு சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், 126 பேரில் 113 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றங்களுக்கு சனிக்கிழமை இலங்கை அரசு பரிந்துரை செய்திருப்பதாக இராமேசுவரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மீனவர்கள் திங்கள்கிழமை விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இராமேசுவரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மேலும் 13 மீனவர்களும் 113 பேருடன் சேர்த்து விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மீனவ சங்கத் தலைவர்கள் போஸ், எமரிட் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisements