சமூக நீதிக்கும் நல்லாட்சிக்காயும் உரத்து ஒலித்த குரல் ஓய்ந்து விட்டமை தேசத்தின் பேரிழப்பாகும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)


– NFGG ஊடகப் பிரிவு –

சமூக நீதிக்கும் நல்லாட்சிக்காயும் உரத்து ஒலித்த குரல் ஓய்ந்து விட்டமை தேசத்தின் பேரிழப்பாகும் என மதிப்புக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மறைவையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மரணம் மிகுந்த கவலையை அளிக்கிறது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதனை சம்பிரதாய பூர்வமான அனுதாபச் செய்தியாக கருதவில்லை. அதனையும் தாண்டி, நீதிக்கான போராட்டத்தின் சக பயணி ஒருவரை இழந்து விட்டோம் எனும் வலியையும் வேதனையையும் ஆழமாக உணர்கிறோம்.

நமது இலங்கைத் திரு நாட்டில்  சமூக நீதியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துவதற்காகவும், ஜனநாயக மீட்புக்கும், அதிகார துஷ்பிரயோகத்தை முறியடிப்பதற்குமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்திற்கு தலைமை வழங்கிய மகத்தான ஆளுமை அவர்.

கடந்த பல வருடங்களாக அவரது தலைமையில் இயங்கிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயலூக்கமிக்க பங்காளியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இருந்து வருகிறது. மரியாதைக்குரிய சோபித தேரர் அவர்கள் எம் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார். அப்படியான ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டோம். இந்த இழப்பை ஈடு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே.

இந்த நாடு மிகப் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்த நெருக்கடி மிக்க தருணத்தில், மரியாதைக்குரிய தேரர் அவர்கள் ஆற்றிய துணிகரமான, காலப் பொருத்தம் மிக்க அர்த்தபூர்வமான பங்கையும் பணியையும் வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சமூக நீதியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் எப்போதும் யாருக்கும் அஞ்சாமல் துணிந்து குரல் எழுப்பிய அசைக்க முடியாத ஆளுமை அவர். அநியாயக்கார ஆட்சியாளர் முன்னிலையில் உண்மையை உரத்துப் பேசிய அந்தக் குரலை இனிக் கேட்க முடியாது என்பது எவ்வளவு பாரிய இழப்பு. இப்படி ஒரு குரலுக்காக இந்த தேசம் இனி எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

பாரபட்சம், பக்கச் சார்பின்றி எல்லா சமூகங்களையும் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்து செயற்பட்ட, இந்த நாட்டின் பன்மைத் தன்மையை- குறிப்பாக சிறுபான்மை சம்மொகங்களின் உள்ளக் கிடக்கைகளை – புரிந்து செயற்பட்ட அவரது மன விசாலத்தை இந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மனதார மெச்சுகிறது.

நாட்டில் ஆட்சி முறை மாற்றம் அவசியம் என்பதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து, கொழும்பு புதிய நகர மண்டபத்தில் முதன் முதலில் நடத்திய பொதுக் கூட்டத்திலும், தேர்தலுக்குப் பிந்தி ‘மாற்றத்திற்குப் பங்களித்த மக்களைப் பாராட்டுவோம்’ என்ற கருப்பொருளில் கொழும்பில் நடத்திய கூட்டத்திலும் மரியாதைக்குரிய தேரர் அவர்கள் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டமையை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்வது பொருத்தமானது.

எதிர்வரும் நவம்பர் 25 இல் நடைபெறவுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பேராளர் மாநாட்டில் மரியாதைக்குரிய தேரர் அவர்கள் ஒரு முக்கிய பேச்சாளராக அழைக்கப்பட இருந்தார். இனி அவர் நம் மத்தியில் இல்லை. ஆனாலும் அவரது நினைவுகள் வாழும்.

சம்பிரதாயபூர்வமான ஒரு மதகுருவின் பணிகளுக்கு அப்பால் சென்று, அவர் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த மதிப்புணர்வுடனும் நன்றியுணர்வுடனும் நினைவு கூர்கிறது.

மதிப்பிற்குரிய தேரர் அவர்கள் எவ்வாறான ஆட்சி முறை மாற்றத்திற்கும், அர்த்தபூர்வமான நல்லாட்சிக்கும் உழைத்தாரோ, அதனை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்திக் காட்டுவதே அவருக்குச் செய்யும் உண்மையான கைமாறாய் அமையும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகிறது.