பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் சுய வாழ்விலும் உயர்நிலையை அடைவர் – தொழிலதிபர் உவைஸ் எம் பாஸில்


– பஷீர் அலி –

தமக்குள் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள மனநிலையை காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளும்போதே வாழ்வில் உயர்நிலையை அடையலாம். பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் சுய வாழ்விலும் உயர்நிலையை அடைவர் என தலைமைத்துவ பயிற்சி வளவாளரான தொழிலதிபர் உவைஸ் எம் பாஸில் தெரிவித்தார்.

கண்டி மடவளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்காக இடம்பெற்ற விஷேட பயிற்சி முகாமில் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘ஹாதிமுல் உம்மா வெல்பெயார் எசோஸியேஷன்’ (குவா) அமைப்பின் ஏற்பாட்டில் மடவளை கார்டியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அனுபவப்பகிர்வு மற்றும் செயற்பாட்டு வழிமுறை நுட்பங்களுடாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த உவைஸ் எம் பாஸில் மேலும் தெரிவித்ததாவது. பொதுமக்களுக்கு தீங்கு செய்யும் காரணிகளை கண்டால் உரியவர்கள் அதனை செய்து கொள்ளட்டும் என்ற சுயநலத்துடன் விலகிச் செல்வது மனிதத் தன்மை அல்ல. இந்தத் தீங்கில் இருந்து பிறரைக் காப்பது எப்படி என முயற்றசிப்பவரே தலைமைத்துவப் பன்பு கொண்ட மனிதர்.

தூய்மையான எண்ணத்துடன் ஒரு பொது வேலையை செய்யும்போது நமக்கு உதவியாக பலர் வந்து இணைந்து கொள்வர் என்பது யதார்த்தபூர்வமான உண்மையாகும். அதனை விடுத்து, தனியாக என்னால் இதனை சாதிக்க முடியாது என விலகிச் செல்பவர்கள் தலைமைத்துவ ஆற்றல் அற்றவர்களே.

பொதுநல வேலைகளை செய்ய முற்படும்போது பல தடைகள் வரலாம் அதனை பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் பொது வாழ்விலும் சுய வாழ்விலும் உயர் நிலையை அடைந்து கொள்கின்றனர்.

This slideshow requires JavaScript.