சித்திக்கிற்கு பிணை வழங்க எதிர்ப்பு – தொடர்ந்தும் விளக்கமறியல்


சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முஹமட் சித்திக்கை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சித்திக்கின் வங்கிக் கணக்குகள் தொடர்ந்தும் பரிசோதிக்கப்பட்டு வருவதாக, தெரிவித்தனர்.

இதனால் அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு வௌியிடுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்படி விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய சந்தேகநபரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் மொஹமட் சித்திக் சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.