சோபித தேரர் என்ற ஒரு நல்ல உள்ளத்தை இழந்து தவிக்கின்றோம். சனிமௌன்ட் விளையாடுக் கழகத்தின் அனுதாபச் செய்தியில் மனாப்


– எம்.வை.அமீர் –

கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின்இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு நல்லாட்சியை விரும்பும் அனைத்து இலங்கையருக்கும்  பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சனிமௌன்ட் விளையாடுக் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

சோபித தேரர் என்ற ஒரு நல்ல உள்ளத்தை இழந்து தவிக்கின்றோம். இவரது வெற்றிடம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் என்றும் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஆற்றிய பணி இனமத எல்லைகளைத் தாண்டியது என்றும் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த கால சோககரமான யுத்தம் முடிவுற்ற நிலையில் முன்னைய அரசின் எதேச்சதிகாரம், ஊழல்,அநீதிகள் என்பனவற்றுக்கெதிராக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடாத்தும் ஆளுமைமிக்க ஒரு பௌத்த சமயத் தலைவராக சோபிததோர் செயற்பட்டு வந்தார்.

நாட்டை சீர்குலைத்த கொடிய யுத்தத்துக்கு இடையே கடந்த 1987ல் இடம்பெற்ற  இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்திய சமாதானப்படை இலங்கை மண்ணுள் நுழைந்தமை ஒரு வகைஆக்கிரமிப்பு என்று துணிந்து கருத்துத் தெரிவித்து தமது இயக்கத்தின் உறுப்பினரர்களையும் சிவில் மற்றும் இடதுசாரி இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தையும் தலைமை தாங்கி நடாத்தினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, தேர்தல் முறைமையில் சீர்திருத்தம், தேசிய நல்லிணக்க அரசாங்கம் உருவாக்கம் என்ற விடயங்களை தனது கொள்கைப் பிரச்சாரங்களின் இணைத்து பெரும்பாலானவற்றில் வெற்றியும் கண்டார்.

செழிப்பான இலங்கை உருவாக்குவதற்காக சுமார் 110 சிவில் சமூக அமைப்புக்களை ஒன்று திரட்டிய பாங்கு சமகால இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய திருப்புமுனையினை ஏற்படுத்தியது. அதனது தீர்வுகள் அவருக்கு அச்சுறுத்தல்களாக மாறிய போதிலும் அஞ்சா நெஞ்சத்துடன் நல்லாட்சியைவலுப்படுத்துவதில் தனது பங்களிப்பை உச்ச அளவில் மேற்கொண்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யார் பொது வேட்பாளர்? ஏன்ற சர்ச்சை நீடித்து போது யாரும்முன்வராவிட்டால் சோபித தேரர் பொது வேட்பாளராகக் களமிறங்குவார். என அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு மிகுந்த மக்கள் செல்வாக்கும், ஜனரஞ்சகமும் கொண்ட சமய சமூகத்தலைவராக மக்களால் நோக்கப்பட்டார்.

நல்லாட்சிக்காக தன்னையே அர்ப்பணித்த  ஒரு மாமனிதர் அதனை வலுப்படுத்தி, உரமூட்டவேண்டிய இப்போதைய தருணத்தில்  மரணம் எய்திருப்பது நிரப்ப முடியாத ஒரு பாரிய இழப்பையும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, அநீதிகளுக்கு எதிரான குரல் ஓய்ந்து விட்டதா? ஏன்ற மனக்கவலையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பௌத்த தலைவராக இருந்தும் தமிழ் பேசும் சமூகங்களின் விவாகாரங்களில் அக்கறை செலுத்திய அவர் பௌத்த தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் ஒரு நடு நிலையான பௌத்த துறவியாக செயற்பட்டு சமதான சகவாழ்வுக்கு இதயசுத்தியுடன் குரல் கொடுத்த்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.