3 சுங்க அதிகாரிகளுக்கும் பிணை இல்லை!


வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரை தொடர்ந்தும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவர்களை பிணையில் விடுவித்தால் விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டது.

இந்த விடயம் குறித்து 12 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏழ்வரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் இன்னும் இரு அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன்போது ஆணைக்குழு தெரிவித்தது.

முன்வைத்த தகவல்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய சந்தேகநபர்கள் மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளிலுள்ள முன்னேற்றம் குறித்து அன்றையதினம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.