மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபை தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி குறித்த நபர்களுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுககப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட பஸ்களுக்கு 42 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.