இன்று சர்வதேச நீரிழிவு தினம்


சர்வதேச நீரிழிவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றான நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன் வருடந்தோறும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த நாள் நினைவுகூரப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ள்ஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்த பிரட்ரிக் பான்ரிங் என்பவரின் பிறந்ததின நினைவாகவே இந்த நாள் நினைவுகூரப்படுகின்றது.

இந்த தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் இன்று (14) காலை விழிப்புணர்வு பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தை சென்றடையவுள்ளது.

மாநாட்டு மண்டப வளாகத்தில் நீரிழிவு நோய் தொடர்பான கண்காட்சி இடம்பெறவுள்ளதுடன், இந்த நோய் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.