எவன்கார்ட் சர்ச்சை; 150 சர்வதேச கப்பல்கள் இலங்கையின் பாதுகாப்பை விலக்கி கொண்டது


எவன் கார்ட் நிறுவனத்தினால் இதுவரை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த 150 சர்வதேச கப்பல்கள் எதிர்காலத்தில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரப் போவதில்லை என்று கூறியுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. எவன் கார்ட் நிறுவனம் சம்பந்தமாக எழுந்துள்ள சர்ச்சை நிலைமை காரணமாக, குறித்த சர்வதேச கப்பல்கள் தமது நிறுவனத்திடம் அறிவித்துள்ளதாக எவன் கார்ட் நிறுவனத்தின் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினல் கேணல் நிலந்த ஜயவீர கூறினார்.

எவன் கார்ட் நிறுவனத்திடம் காணப்பட்ட பாதுகாப்பு ஆயுதங்கள் தற்பொழுது தெற்கு கடற்படைத் தளபதியினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரை பாதுகாப்பு வழங்கி வந்த சர்வதேச கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 06 வணிக கப்பல்களின் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 நாடுகளில் காணப்பட்ட தமது நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அலுவலகங்களில் இருந்த பொருட்களை விற்பனை செய்து விட்டு அலுவலக ஊழியர்களை இலங்கைக்கு வரவழைத்துள்ளதாகவும் நிலந்த ஜயவீர மேலும் கூறினார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் எமது செய்திப் பிரிவு வினவியதற்கு, அவ்வாறு சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு வழங்க முடியாமல் வணிக கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் மாத்திரம் 37 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டயாரச்சி தெரிவித்துள்ளார்.