காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா-காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு


– எ.எல்.டீன்பைரூஸ் –
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா- காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு காத்தான்குடி ஜம்இய்யா அலுவலகத்தில் அதன்  தலைவர்  மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் பரிகாரம் காணும் நோக்கில் காத்தான்குடி மீடியா போரம்  மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிருடனான சந்திப்பினை ஏற்படுத்தி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள், அது தொடர்பிலான பல்வேறுபட்ட விடயங்களை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில், பல தரப்பினர்களாலும் குறிப்பாக, அரசியல் அதிகாரமுள்ளவா்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், திணைக்கள அதிகாரிகள் உட்பட பல்வேறுபட்ட தரப்பினராலும் இவ்வைத்தியசாலை நன்கு கவனிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் காத்தான்குடி மீடியா போரம் தனது கவனத்தைச் செலுத்தி பல்வேறுபட்ட தரப்பினரையும் கட்டம் கட்டமாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை என்பது மிகப்பெறுமதிமிக்க வளமாகும். இதன் உருவாக்கத்தில் பல தரப்பினரதும் தங்களது காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதனை இலகுவில் சமூகம் மறந்து விடமுடியாது. அந்த வகையில், காத்தான்குடியில் தாய் நிறுவனமாக இருந்து பல ஆண்டுகள் சேவை செய்து வரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா  ஆகிய நிறுவனங்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை உருவாக்கத்தில் தங்களது தாராளமான பங்களிப்பினை செய்திருக்கின்றன. செய்து வருகின்றது என்பதனையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரம் முதல் கட்டமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினைச் சந்தித்துப் போசியதினை அடுத்து, இரண்டாம் கட்டமாக காத்திரமான பணிகள் செய்து வரும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையுடனான சந்திப்பினை ஏற்படுத்தி வைத்தியசாலை தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தினர். மேற்படி கலந்துரையாடலில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற பல்வேறுபட்ட பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தாங்கள் எத்தரப்பினரையும் சந்திப்பதற்கும் அதற்காகப் பாடுபடுவதற்கும் தயாராக இருப்பதாகவும், ஜம்இய்யாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் உலமாக்கள் தங்கள் மிம்பா்களைப் பயன்படுத்த வேண்டுமென்ற மீடியா போரத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட  ஜம்இய்யதுல் உலமா எதிர்வரும் இரண்டு வாரங்களை இதற்காகப் பிரகடனப்படுத்தி, ஜூம்ஆவிற்கான தலைப்புகளைக் கொடுத்து தாங்கள் உலமாக்களை பயன்படுத்தி மேற்படி விடயம் தொடர்பாக ஜூம்ஆப் பிரசங்கம் செய்வதாகவும் தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு வருகின்ற மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட்டது. இச்சந்திப்பின் போது, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையின் பிரதியொன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இது சமூகத்தின் முக்கியமானதொரு தேவையாக இருப்பதனால், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஏனைய சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து காத்தான்குடி மீடியா போரம் மேற்படி விடயத்தினை மேற்கொள்ளவிருப்பதனால் சகல தரப்பினரும் மேற்படி விடயத்தில் பூரண ஒத்துழைப்பக்களை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) செயலாளர் ஏ.ஜீ.எம்.ஜெலீல் (மதனி) ) மற்றும் ஜம்இய்யாவின் நிருவாக சபை உறுப்பினர்களும் காத்தான்குடி மீடியா போரம் சார்பில் அதன் தலைவர், செயலாளர் உட்பட நிருவாக சபை  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Advertisements