டெண்டுல்கர் யார் என்று தெரியாதா? ரசிகர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது ட்விட்டரில் ‘அர்ச்சனை’


சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெண்டுல்கரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் சமீபத்தில் டெண்டுல்கர் பயணித்திருக்கிறார். அப்போது அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட சேவை குறித்து அதிருப்தி அடைந்த அவர், அந்த நிறுவனத்தின் விமானப் பணியாளர்களின் “ஏனோ,தானோ” அணுகுமுறை பற்றி தனது ட்விட்டர் கணக்கில் புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் “காத்திருப்போர் பட்டியலில்” வைக்கப்பட்டு, இடம் இருந்த நிலையிலும், பயணச்சீட்டு உறுதி செய்யப்படவில்லை , என்று அவர் கூறியிருந்தார். மேலும் தனது பெட்டி தவறான இடத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

Image copyrightsachintwittergrab
Image captionசச்சினின் புகார் ட்வீட்
பெட்டி தவறான இடத்துக்கு சென்றது என்ற சச்சினின் ட்வீட்

உடனே இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், டெண்டுல்கரிடம் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோரியதுடன், அவரது முழுப் பெயர் மற்றும் விலாசத்தைக் கோரியிருந்தது.

அவ்வளவுதான், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் விசிறிகள் தங்களது கோபத்தைக் கொட்டித் தீர்த்ததுடன், அந்த நிறுவனத்தின் மீது, சமூக ஊடகப் போர் ஒன்றையே தொடங்கிவிட்டனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பதில் ட்விட்டர் செய்தி

சில விசிறிகள் மேலும் ஆவேசப்பட்டு, இதன் காரணமாக, இந்தியப் பிரதமர் மோடி, தனது பிரிட்டன் விஜயத்தையே ரத்து செய்யவேண்டும் என்றுகூட கோரினர்.

இந்த சர்ச்சை காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது டிவிட்டர் இந்தியாவில் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டுவருகிறது. முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஒமார் அப்துல்லாகூட இந்த ட்விட்டர் சர்ச்சையில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

“சச்சின் டெண்டுல்கர், இந்தியா” என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முகவரி எழுதினால் போதும், இந்திய தபால் துறையோ அல்லது தனியார் கூரியர் நிறுவனங்களோ ஒழுங்காகக் கொண்டுசேர்த்துவிடும் என்று ட்விட்டரில் ஒமார் அப்துல்லா கலாய்த்திருந்தார் !

ஒமார் அப்துல்லாவின் ட்வீட்

இந்திய கிரிக்கெட் விசிறிகள் பலருக்கு டெண்டுல்கர் ஏதோ ஒரு தெய்வம் போல. அவருக்காக, பீஹார் மாநில கிராமம் ஒன்றில்,கோவில் ஒன்று கூட கட்டப்பட்டது செய்திகளில் முக்கிய இடம் பிடித்திருந்தது. அந்தக் கோயிலில் டெண்டுல்கரின் வெண்பளிங்கினால் ஆன சிலை ஒன்று வேத கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. கல்கத்தாவின் துர்கா பூஜையின் போது அவருக்காக ஒரு பந்தல் அர்ப்பணிக்கப்பட்டது.

டெண்டுல்கர் 2013ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது, பலர் நாடெங்கிலிருந்து அவர் மும்பையில் விளையாடிய கடைசி மேட்சைப்பார்க்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாங்கள் கடவுளாக வழிபடும் சச்சின் டெண்டுல்கர் விவகாரத்தில் அவரது இந்திய ரசிகர்கள் கோபப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல.

2014ல் , டெண்டுல்கர் யாரென்று தனக்குத் தெரியாது என்று கூறிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை, மரியா ஷரப்போவாவை, டெண்டுல்கர் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாட்டி எடுத்துவிட்டனர்.

பாவம் ஷரப்போவா, அவர் ஒரு கிரிக்கெட் விளையாடும் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்று சிலர் அவருக்காகப் பரிந்து பேசினர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அப்படிக் கூறிக்கொள்ள முடியாதுதானே ?

Advertisements