மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு


– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார  திலங்க ஜெயலால் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாத்திரம் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10-11-2015 நேற்று வரை மது போதையில்  வாகனம் செலுத்திய 92 பேரை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் கைது அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து தண்டப் பணம் (அபராதம் ) செலுத்த வைத்துள்ளதாகவும் கடந்த வருடம் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை 92 காக இருந்ததாகவும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடம் வீதி விபத்துக்கள் தொடர்பில் வினவியபோது 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10-11-2015 நேற்று வரை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 77 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பாரிய விபத்துக்களினால் 10 பேர் மரணத்தை தழுவியுள்ளதாகவும் கடந்த வருடம் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 92 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பாரிய விபத்துக்களினால் 8 பேர் மரணத்தை தழுவியுள்ளதாகவும் கடந்த வருடத்தை விட இந்ந வருடம் இப் பொலிஸ் பிரிவில் வீதி விபத்துக்கள் குறைந்து காணப்படுவதோடு பாரிய விபத்துக்களினால் மரணத்தை தழுவியுள்ளவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும், மது போதையில்  வாகனம் செலுத்துவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து அவர்களிடம் இருந்து 7500.00 ரூபா 10000.00 ரூபா 15000 ரூபா 20000.00 ரூபா போன்ற தொகைகள் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ,குறித்த வீதி விபத்துக்கள் மற்றும் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.