மஹிந்த, சந்திரிக்கா, மைத்திரி இணைந்து செயற்படுவதால் வெல்லலாம்!


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து செயற்படுவதால், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தமைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெரும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எப்போதும் கட்சியில் இருந்து விலகாதிருக்கவும் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற கூட்டமைப்புக்கு தலைமையேற்பதாக கூறியுள்ள நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க கட்சியின் மத்திய செயற்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி மிக முக்கிய செயற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கூட்டமைப்பில் இல்லாத மேலும் எட்டுக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.