மூத்த மகனுக்கு ஏற்பட்ட சதி இளைய மகனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது : குணரத்னத்தின் தாயார்


அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்திருந்த தனது மகன் பிரேம்குமார் குணரத்னத்திற்கு; இலங்கையில் குடியுரிமை வழங்கி அவருடைய உரிமைகளை வழங்குங்கள். எனது மூத்த மகனுக்கு ஏற்பட்ட சதி இளைய மகனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கூறி அவரது தயார் ராஜமனி குணரத்னம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

100 நாள் அரசாங்கத்தில் இலங்கை குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் சமர்ப்பித்த போதும் அதனை அப்போதைய அமைச்சர்  ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால், தனது மகனின் கோரிக்கையை நிறைவேற்றுவீர் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் அந்த கடிதத்தில ராஜமனி குணரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

குமார் குணரத்னத்தின் தயார் ராஜமனி குணரத்னம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிபராக நீண்டகாலம் சேவையாற்றிய எனக்கு என்பது வயதாகும்.  நான் பிரேம்குமார் குணரத்னம் என்பவரின் தாயாராவேன். கேகாலை , உந்து;கொட பிரதேசத்தில் பிறந்த எனக்கும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ஆதிமுலம் பிள்ளை குணரத்னம் என்பவருக்கும் பிறந்தவரே பிரேம்குமார் குணரத்னம். கடந்த நான்காம் திகதி குமாரை பொலிஸார் கைது செய்து தற்போது கேகாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கேகாலையில் அரச வைத்தியசாலையில் பிறந்து,; பின்னவல மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இலங்கை பிரஜை. மேலும் அவர் பேராதெனிய பல்கலைகழகத்தின் பொறியியல் பீடத்தில் உயர் கல்வியை பயின்றார்.

என்னுடைய மூத்த மகனும் பேராதெனிய பல்கலைகழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்றார். அப்போது அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் செயற்ப்பாட்டாளராக பதவிவகித்தார்.  பின்னர் அரசியல் நடவடிக்கைகளின் தீவிரமாக ஈடுப்பட்ட போது,1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பினனர் என்னுடைய மகனை நான் காணவில்லை. இதுவரைக்கும் எந்தவொரு தகவலும் தனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய இரண்டு மகன்மாரும் அரசியலில் ஈடுப்பட்டமையினால் பலதடவை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணனின் மறைவின் பின்னர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது மீளவும் அரசியலில் ஈடுப்பட்ட பிரேம் குமாரிற்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதனை கவனத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு அவரது கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று தஞ்சம் புகுந்தார். 2011 ஆம் ஆண்டு அவர் மீளவும் நாட்டிற்கு வருகை தந்த போதிலும் கட்சியின் பிளவுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை அவர் சந்தித்தார். அதேபோன்று 2012 ஆம் ஆண்டு கிரிபத்கொடையில் வைத்து அவரை இனந்தெரியாத சிலர் கடத்தி சென்றனர். பல முயற்சிகளுக்கு அப்பால் அவர் உயிருடன் வீடு திரும்பினார். அதன்பின்னர் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு சென்றார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி அவர் மீளவும் இலங்கைக்கு வருகை தந்தார். இதன்போது அவர் தன்னுடைய குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்ற வயிலாக முயற்சித்தார். 100 நாள் அரசாங்கம் ஆட்சி வகித்த காலப்பகுதியின் போது அப்போது குடிவரவு குடியகல்வு அமைச்சராக பதவி வகித்த ஜோன் அமரதுங்கவிடம் கையளித்தபோதும் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கோரினார். இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி அவரை பொலிஸார் கைது செய்தனர்.

ஆகவே இது தொடர்பில் ஜனாதிபதி என்ற வகையில் அவதானித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மூத்த மகனின் மறைவு எனக்கு ஈடுக்கட்ட முடியாத ஒன்றாகும். என்னுடைய இரண்டாவது மகனின் நிலையும் இவ்வாறு ஆகாமல் செயற்படவேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய ஒழுங்கு முறைப்படி செயற்படுவதாக நீங்கள் வழங்கிய வாக்குறுதியை நான் முழுமையாக நம்புகிறேன்.  ஆகவே என்னுடைய மகனுடைய உரிமைகளை மீளவும் வழங்குமாறு வேண்டுகின்றேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.