கடற்கரை மணலில் அவளும், நானும்..!


கடற்கரை மணலில் அவளும், நானும்..!
மதியன்பன்
இன்னும் அவள்
என் இதயத்துள்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்.
கையைப் பிடித்து
காசு கொடுத்து
கன்னத்தை வருடி விட்டு
கதை பேசிய காலமது..!
கடலோரக்
காற்றுக்குத் தெரியும்
என்
உடல் பசிதீர்த்த
அந்த உறவின் வரலாறு…!
அவள்
நடந்து வரும் அழகில்
என் மனது மட்டுமல்ல
ஆழ் கடலின்
அலைகள் கூட ஆர்ப்பரித்தெழும்…
விலாசம் கேட்டு
விசாரித்த போதுதூன்
அவளது
அன்பு மழையில் நினைந்து போனேன்.
என் படிப்புக்காய்
பெற்றோர் தரும் பணத்தில்
பாதியை
அவள் விருப்புக்காய்
வைத்திருந்த நாட்கள் ஏராளம்.
இப்போது அவளுக்கு
எவன் புருசனோ..
எத்தனை குழந்தைகளோ…
இருந்து விட்டுப் போகட்டும்
நினைக்க மட்டுமே முடிகிறது என்னால்..
ஒருமுறையாவது
அவளை
பார்த்துவிட வேண்டுமென்று
என்
பாழாய்ப் போன மனது
பதறிக் கொண்டிருக்கிறது…
கடற்கரை மணலில்
கச்சான் கொட்டை விற்றுத் திரிந்த
அந்த
எட்டு வயதுச் சிறுமியின்
எழிலான உருவமே மட்டுமே
இன்னுமென் இதயத்தில்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது..
காத்தான்குடி மதியன்பன்