குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்:ஜெர்மனியில் கால்பந்து போட்டி ரத்து


ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் போட்டி ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்தது.

ஹானோவர் நகர் முழுவதற்கும் ஆபத்து இருப்பதாக திடமாக உணரப்பட்டது என நகரின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர், அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

ஜெர்மனிய அரச தலைவி ஏங்கலா மெர்க்கல் அம்மையார் இந்த கால்பந்து போட்டியை பார்வையிட இருந்தார்.

இது தவிர இசை அரங்கு ஒன்றிலிருந்தவர்களும் அங்கிருந்து வெளியெற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே லண்டன் வெம்பிளி விளையாட்டு அரங்கில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் துவக்கத்தில் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் இரு அணிகளின் ரசிகர்களும் பிரெஞ்ச் தேசிய கீதத்தை பாடினர்.