முக்கியமான நண்பர்கள் யாரென முடிவு செய்யும் பேஸ்புக்


நமது பேஸ்புக் பக்கத்தில் உள்ள ‘பிரெண்ட்ஸ்’ என்கிற குறிப்பின் கீழ் முக்கியமாக ஒன்பது பேர் தோன்றுகின்றனர், இல்லையா? அதில் நாம் நேரில் சந்திக்காத நண்பர்களது நண்பரான ஒருவர் தொடர்ச்சியாக தோன்றுவதைப் பார்த்ததுண்டா? ஏன் இவரை பேஸ்புக் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவராக முதன்மையாக காண்பிக்கின்றது என யோசித்துப் பார்த்ததுண்டா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கிடமும் பலமுறை இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஒரு சிலருக்கு இதற்கான பதிலும் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, பேஸ்புக் நமது விருப்பங்களுடன் ஓரளவு ஒத்துப்போகும், புதிய நண்பர்களின் புகைப்படங்களை இந்த ஒன்பது பேரில் ஒருவராக தானாகவே தீர்மானிக்கின்றது.

இதன்மூலம், அவர்களிடம் நாம் மேலும் பழக வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் பொருட்டு இதுபோன்றவர்களை பேஸ்புக் நமது பக்கங்களில் முதன்மைப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. எனினும், இதுபோல பேஸ்புக் குறிப்பிட்டு இவரைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும் என செய்வதில்லை எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல முதன்மைப்படுத்தப்படும் நண்பர்களைப் பற்றிய செய்திகளை நாம் கேட்காமலே பேஸ்புக் நமக்கு பகிர்கின்றது. நாம் பேஸ்புக் மூலமாக புதிதாக ஒரு நண்பரை அடைந்தால் வருமானம் பேஸ்புக்குக்குத்தானே!