உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது


எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20, மற்றும் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைமைப் பொறுப்பு லசித் மாலிங்கவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது, துணைத்தலைவராக அஞ்சலோ மத்தியுஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வீரர்களை தேர்வு செய்தவர்கள், இடது கை சுழல்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தையும் இரண்டு போட்டிகளிலும் விளையாடுவதற்காக தெரிவு செய்துள்ளனர்.

ரங்கன ஹேரத் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதுடன், 2014 இல் உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவிற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணியில் மேலும், திலகரத்ன டில்ஷான், தினேஷ் சந்திமால், சாமர ஹப்புகெதர, மிலிந்த சிறிவர்த்தன, டசுன் சானக்க, ஷேகான் ஜெயசூரிய, நிரோஷன் டிக்வெல்ல, திஸ்ஸாரா பெரேரா, துஸ்மந்த சமீரா, நுவான் குலசேகர, சசித்திர சேனாநாயக்க, ஜெஃப்ரி வண்டேர்சி, ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

உலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள சகல நாட்டு அணிகளின் விபரங்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், நடப்பு சாம்பியன்களான இலங்கை கிரிக்கட் அணியில் இடம்பெறும் வீரர்களின் விபரங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டிராத நிலையில் இன்று இறுதியாக அந்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisements