கூகுள் ‘லூன் பலூன் விழவில்லை, தரையிறங்கியது’: அமைச்சர் ஹரீன்


இலங்கையில் அதிவேக இணைய வசதியை வழங்கும் பொருட்டு கூகுள் நிறுவனத்தினால் வான் பரப்பில் பறக்கவிடப்பட்டிருந்த பெரிய பலூன் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட் கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ கூறுகின்றார்.

அந்த பலூன் திட்டமிட்டபடி உரிய இடத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தரையிறக்கப்பட்ட இந்த பலூனில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் நல்ல நிலையில் செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அதில் மீளவும் ஹீலியம் வாயுவை நிரப்பி இரத்மலானையிலிருந்து பறக்கவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Hareen

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகவேக இணைய வசதியை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்தினால் “லூன்” என்ற பலூன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முதலாவது பரீட்சார்த்த நாடாக இலங்கையை தெரிவு செய்த கூகுள் நிறுவனம், அரசாங்கத்தின் அனுமதியுடன் லூன் திட்டத்தின் கீழ் குறித்த பலூனை பறக்கவிட்டது.

வானில் உலாவரும் இந்த பலூன் மூலம் அதிவேக இணைய வசதியை கிராமிய மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு வழங்குவது கூகுளின் திட்டமாக உள்ளது.