சம்பூர் அனல் மின்நிலைய கழிவு நீரை ‘வேறு கடலுக்கு மாற்றத் திட்டம்’


இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசத்தில் இந்திய உதவியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்தின் கழிவுநீரை கடல் வளங்களுக்கு பாதிப்பு இல்லாமல் வெளியேற்றக் கூடிய விதத்தில் தங்களின் திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் துணை அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் இன்று வியாழக்கிழமை சம்பூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்து அனல் மின்நிலையம் அமையவுள்ள இடங்களை பார்வையிட்டனர்.

சம்பூர் பிரதேசத்திற்கு சென்ற அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவை உள்ளுர் மக்கள் சந்தித்து குறித்த அனல் மின்நிலையத்தை வேறிடத்திற்கு மாற்றம் செய்யுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அந்தக் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர், மக்களுக்கோ சுற்றாடலுக்கோ பாதிப்பு இன்றி பாதுகாப்பான முறையிலேயே இந்த அனல் மின்நிலையம் அமையும் என்று உறுதி அளித்துள்ளார்.

முன்னர் தயாரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அனல் மின்நிலையத்திற்கு கடல்நீரை உள் வாங்கவும் அனல் மின் நிலையத்திலிருந்து வெந்நீரை வெளியேற்றவும் சம்பூர் கரையோரத்திலுள்ள குடாக் கடலை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மக்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

புதிய திட்டத்தின் கீழ் அனல் மின்நிலையத்திற்கு கடல்நீரை உள் வாங்கவும் அங்கிருந்து வெந்நீரை வெளியேற்றவும் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கந்த கடல் பகுதியை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்களிடம் கூறியதாகவும் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.

Advertisements