தலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு


7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி கீழே  கட்டுமான வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்ததை  அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

மும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டும் அடுக்குமாடி கட்டிடம்  பணியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தன்று சீமெந்து கலவை செய்யும் பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் இருந்து 7 அடி நீளமான  இரும்பு கம்பி ஒன்று தவறி கீழே வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளி முகமது குட்டு(வயது24) என்பவர் தலையில் பாய்ந்தது.

பாய்ந்த அக்கம்பி மண்டை ஓட்டுக்குள் புகுந்து தலையின் பின்பக்கமாக வெளியே வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத முகமது குட்டு சுருண்டு விழுந்து வேதனையில் துடித்தார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க மேலதிக சிகிச்சைக்காக அவர் சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர் பாதுக் தியோரியா தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் முகமது குட்டுவின் தலையில் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு  முகமது குட்டுவின் தலையில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை வெற்றிகரமாக அகற்றினார்கள்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது மிகவும் கடினமான மற்றும் சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது.தலையில் பாய்ந்த கம்பி மூளையை துளைக்காததால் முகமது குட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு அவரது மண்டை ஓட்டில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை அகற்றினோம்.

அவர் உடல் நலம் தேறிவர 2 வாரங்கள் வரை ஆகுமென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisements