முக்கிய விசாரணைகளின் அறிக்கைகள் மார்ச் மாதம் வௌியாகும்


தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய விசாரணைகளின் அறிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதமளவில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது ஆணைக்குழுவினால் தற்சமயம் சுமார் 400 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் சுமார் 40 முறைப்பாடுகள் பாரதூரமான முறைப்பாடுகள் என்றும் அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார்.

அதன்படி தற்சமயம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நூற்றுக்கு 80 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமது ஆணைக்குழு எந்த சந்தர்ப்பத்திலும் மக்களுக்கோ சாட்சியாளர்களுக்கோ அழுத்தங்களை பிரயோகித்து வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதில்லை என்றும் லெசில் டி சில்வா கூறினார்.

இதுதவிர வாக்குமூலம் அளிப்பதற்காக வருவோரின் தாமதத்தினால் சில முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements